அபுஜா, நைஜீரியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியிலிருந்து பெட்ரோல் எடுக்க மக்கள் கூட்டமாக திரண்ட போது, அந்த டேங்கர் வெடித்து 147 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவில் சரக்கு போக்குவரத்துக்கு தேவையான ரயில்வே அமைப்பு இல்லாததால், பெட்ரோல் போன்ற பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் சாலை வழியாகவே கொண்டு செல்லப்படுகின்றன. இதனால், இங்கு டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஜிகாவா மாகாணத்தில், தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் இருந்து கசிந்த பெட்ரோலை பிடிக்க அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் லாரியின் முன் திரண்டனர். அப்போது ஏற்பட்ட தீயில் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 147 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கடந்த 13ம் தேதி, பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, எதிரே வந்த மற்றொரு லாரியுடன் மோதியதில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர். தங்கள் நாட்டில் ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட டேங்கர் லாரி விபத்துகள் நிகழ்வதாகவும், இதில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகவும் நைஜீரியா சாலை பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

