திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா? என தவெக தலைவர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய சீமான்

அரசியல் சிறப்பு தமிழ்நாடு

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒரே ஒன்றா என கேள்வி எழுப்பியுள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். விஜய் கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு முன்னதாக, அக்கட்சியுடன் கூட்டணி வாய்ப்புகள் குறித்து திறந்த மனதுடன் பேசிவந்த சீமான், மாநாட்டில் விஜய் கூறிய கருத்துகளை எதிர்த்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் எனக் கூறியதற்குப் பிறகு, சீமான் மேடையில் நேரடியாக விஜய்யை விமர்சித்து, இரண்டையும் ஒன்றாகக் கருதுவது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், சீமான் “திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றா?” எனக் கேள்வி எழுப்பி, இதற்கான விளக்கம் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், “ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சேற்றில் கால் வைக்க வேண்டும்” எனக் கூறி, இரண்டையும் ஒரே மாதிரியானதாகக் கருதுவது சரியல்ல என விமர்சித்துள்ளார்.நான் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து சிந்திக்கவில்லை, கொடிய சிறையில் இருந்து சிந்தித்தேன். நான் ஒரு குட்டிக் கதை சொல்லுபவன் அல்ல, வரலாற்றைப் பேச வந்தவன். நீங்கள் பெரியார், அம்பேத்கர் போன்றவர்களை படிக்க வேண்டும். நாங்கள் படித்து பி.ஹெச்டி பெற்றுள்ளோம். இது சினிமாவில் பேசப்படும் பஞ்ச் டயலாக் அல்ல, இது நெஞ்சின் உணர்வுகளை வெளிப்படுத்தும் டயலாக். எங்கள் லட்சியத்திற்கு எதிராக எங்கள் தகப்பனே வந்தாலும், எதிரி தான். இதில் தம்பி அல்லது அண்ணன் என்று பார்க்கமாட்டோம் எனவும், 2026 ஆம் ஆண்டில் என் ஆட்டத்தை யாரும் சமாளிக்க முடியாது என்று அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த அக்டோபர் 27-ம் தேதி , தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் ‘வெற்றி கொள்கைக் திருவிழாவாக’ நடைபெற்றது. அதில் உரையாற்றிய விஜய், “கொள்கை மற்றும் கட்சியின் கோட்பாட்டின் அடிப்படையில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் தனித்தனியாகப் பார்க்க மாட்டோம். திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பதே நமது கொள்கை” எனக் கூறியிருந்தார் அதனை விமர்சித்து சீமான் பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *