ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், பாகிஸ்தானை வீழ்த்தி உலக கோப்பையை வென்றதாக கூறி கடையில் வாங்கிய கோப்பையை காட்டி முதல்வர் ஸ்டாலினையும், அமைச்சர் கண்ணப்பனையும் வித்தியாசமான முறையில் ஏமாற்றியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலடி அருகே உள்ள கீசல்வனூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு இந்திய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியின் கேப்டன் தான் தான் என்று கூறி அவரது கிராம மக்களையும் நம்பவைத்துள்ளார்.
இவர் மார்ச் மாதம் 26ம் தேதி லண்டனில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்றதாகவும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றுவிட்டதாகவும் அந்த பகுதி மக்களிடம் கூறியுள்ளார்.
பாகிஸ்தானைத் தோற்கடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் என்ற நம்பிக்கையில் பெருமையுடன் வினோத் பாபுவை அக்கிராம மக்கள் தலையில் தூக்கிவைத்து கொண்டாடியுள்ளனர். இந்த தகவல் ராமநாதபுரத்தில் இருந்து அமைச்சராக இருக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சென்றுள்ளது. அவரும் வினோத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வினோத் பாபு பாகிஸ்தானை தோற்கடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று கருதி, அவரை முதலமைச்சரிடமும் அழைத்து சென்றுள்ளார் அமைச்சர் ராஜ கண்ணப்பன். ராசியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய கோப்பை என்று வெளிவந்த வடிவேலு நகைச்சுவை காட்சியின் பிரதிபலிப்பாய் வினோத் பாபு வாங்கி வந்த உலகக் கோப்பையுடன் அமைச்சர் ராஜகண்ணப்பனும் முதலமைச்சரை சந்தித்த புகைப்படமும் சமீபத்தில் வெளியானது.
மாற்றுத் திறனர்கள் மேல் தமிழக அரசியல்வாதிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் நடந்த இந்த ஏமாற்று வேலை அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.