தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்யலாம். கள் போதைப் பொருள் அல்ல; அவை உணவுப் பொருட்களின் பட்டியலில் அடங்கும். மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கள் இறக்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கள்ளுக் கடைகளை மூடிவிட்டு, கள் நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் கலப்படத்தை தவிர்க்கலாம். விவசாயத் தோட்டங்களில் இருந்து களை நேரடியாக விற்பனை செய்தால், கலப்படம் ஏற்படாது. எனவே, வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து களை இறக்கி, விற்பனை செய்ய தீர்மானித்துள்ளோம். சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், ஈரோடு பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையின் செயல்பாடுகள் காற்று, தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகின்றன, இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உருவாக்க திட்டமிட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும், எனவே இத்தகைய நிலைமை உருவாகாமல் இருக்க வேண்டும். சுற்றுச்சூழல், வேளாண்மை மற்றும் மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது, என அவர் தெரிவித்தார்.

