குளத்தூர், அரசு உயர்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் பர்ஜித் மற்றும் ஆசிரியர்களின் தகவலின் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உள்ள குளத்தூரில் துணி துவைக்கப் பயன்படுத்திய கல்லில் காணப்படும் கல்வெட்டினை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு ஆராய்ந்து, இது கி.பி. 1638-ம் ஆண்டு இரண்டாம் சடைக்கத் தேவர் என்ற தளவாயான் சேதுபதி மன்னர் குளத்தூர் கண்மாயில் குமிழி மடையை அமைத்துத் கொடுத்ததை குறிக்கும் கல்வெட்டு எனக் கூறினார். கல்வெட்டை பாதுகாக்க வேண்டும் என பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பேரில் இன்று, ராமநாதபுரம் தொல்லியல் துறையின் கீழ், ராமலிங்க விலாசம் அரண்மனை அகழ்வைப் பற்றிய கல்வெட்டு ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தொல்லியல் அலுவலர் சுரேஷ், குளத்தூர் கிராம நிர்வாக அலுவலர் க.தமிழரசி, ஊராட்சி மன்றத் தலைவி பா.நாகலட்சுமி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு மற்றும் ஆசிரியர் பால்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

