தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், இன்று சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. 10வது முறையாக நடைபெறும் இந்த திருவிழா, சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. சென்னையின் அருகிலுள்ள கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில், ஜனவரி 10 முதல் 12ம் தேதி வரை, பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் ஜனவரி 14 முதல் 16ம் தேதி வரை, மேலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18 மற்றும் 19ம் தேதிகளில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. மதுரையில் முதன்முறையாக நடைபெறும் பலூன் திருவிழாவுக்கான தகவல்களை சுற்றுலாத்துறை அதிகாரி வழங்கியுள்ளார். இந்நிகழ்வில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் போன்ற பல நாடுகளின் வெப்ப காற்று பலூன்கள் பறக்கவிடப்பட உள்ளன. இதற்காக, பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன் பைலட்டுகள் தமிழகம் வந்துள்ளனர். மேலும், மிக்கி மவுஸ், டைனோசர் போன்ற பல்வேறு வடிவங்களில் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்கள் பறக்கவிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

