கமல் நடித்த Thug life திரைப்படம் கர்நாடகாவில் திரையிட உச்சநீதிமன்றம் அனுமதி

இசை இந்தியா சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் நீதி மன்றம் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை திரையிட அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், படம் திரையிடுவதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது.
கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், அப்போது, தக் லைஃப் படத்தை வெளியிடும்போது திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக அரசு உறுதி அளித்தது. அப்போது குறுக்கிட்ட, கன்னட திரைப்பட வர்த்தக சபை, கமல்ஹாசன் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே படத்தை வெளியிட முடியும் என்றும் அவர் மக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளார் என வாதிட்டது.
மேலும் படத்தின் பப்ளிசிட்டிக்காக இதுபோன்ற கருத்துகளை முன்வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டியது. இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், ஏதேனும் அவதூறு கருத்து தெரிவித்திருந்தால் அவதூறு வழக்கு தொடரலாம் அல்லது பதில் அறிக்கை விடலாமே தவிர படத்தை வெளியிட தடையாக இருக்கக் கூடாது எனக் கூறியது.
சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், கன்னட திரைப்பட வர்த்தக சபைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் குறிப்பிட்டு அவர்களும் கன்னடர்கள்தான் எனக் கூறிய உச்ச நீதிமன்றம், நாம் அனைவரும் ஒன்றே எனத் தெரிவித்தது.
இதையடுத்து கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், படத்தை திரையிட தடுப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.
அதேநேரம் கர்நாடகாவில் தக் லைப் படத்தை வெளியிட தடை இல்லை என்றாலும் படத்தை வெளியிட விநியோகஸ்தர் முன்வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் அடுத்தடுத்து மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் போதிய திரையரங்குகள் கிடைக்காத காரணத்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தக் லைஃப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காததாலும் படத்தை வெளியிட விநியோகஸ்தர் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *