சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்டில் பயணிகள் ரயில்களை பெண் பணியாளர்களால் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஞ்சி-டோரி பயணிகள் ரயிலை முழுமையாக பெண் பணியாளர்கள் இயக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழுவில் லோகோ-பைலட், உதவி லோகோ-பைலட், ரயில் மேலாளர், மூன்று டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் நான்கு ரயில்வே காவலர்கள் என அனைத்து உறுப்பினர்களும் பெண்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டார். தென்கிழக்கு ரயில்வேயின் ராஞ்சி பிரிவு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். பெண்கள் எந்தவொரு வேலைகளையும் செய்யக்கூடிய திறமையுள்ளவர்கள், அவர்களுக்கு தேவையானது வெறும் வாய்ப்புகள் மட்டுமே என கூறினார் ரயில் மேலாளர் அனுபமா லக்ரா. மேலும் விமான நிறுவனங்கள், விளையாட்டு மற்றும் ரயில்வே போன்ற ஒவ்வொரு துறையிலும் பெண்கள் முன்னேறி வருவதாக தெரிவித்தார்.தென்கிழக்கு ரயில்வேயின் அதிகாரி நிஷாந்த் குமார், ரயில்வே பிரிவு பெண்களை அதிகாரமளிப்பதில் உறுதியாக இருக்கின்றது என கூறினார். இந்த பயணி ரயில், பெண்களால் மட்டுமே இயக்கப்பட்டு, காலை 9 மணிக்கு ராஞ்சி நிலையத்திலிருந்து புறப்பட்டு, காலை 11.30 மணிக்கு டோரியை அடைந்தது. இதில் மொத்தம் 14 நிறுத்தங்கள் உள்ளன.மூத்த டிக்கெட் பரிசோதகர் ஜோதி குஜூர் கூறியதாவது, “மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது பெண்கள் ஒவ்வொரு துறையிலும் முக்கியமான பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர்.” என கூறினார்.

