தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவிக்கு செல்லும் வழியில் ஓம் பிரணவ் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழு பெண்கள் ஒருங்கிணைந்து ஓம் பிரணவ் ஆசிரமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் ஒருங்கிணைத்தவாறு மகிழ்வித்து மகிழ் என்ற தலைப்பை முன்னிறுத்தி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. கலைவாணர் கலைக்குழு சார்பில் தப்பாட்டம், கரகாட்டம், நாடகம் ஆகியவை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் நடன நிகழ்ச்சியும் பேச்சு போட்டியும் சிலம்பாட்டமும் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர். இந்த முத்தமிழின் சங்கமத்தை ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இங்கிலாந்தில் இருந்து வந்த வெளிநாட்டவர்கள் தமிழர்களின் பாரம்பரிய பழக்க வழக்கம் மற்றும் பண்பாடுகளை பார்த்து ரசித்தனர். மேலும் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.

