தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் ஒரு தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இந்த ராக்கெட் வெடித்து சிதறியதன் பின்னர், அதன் பாகங்கள் எரிந்து விண்ணில் இருந்து விழுந்ததால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கடந்த ஜனவரி 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஸ்டார்ஷிப் 7 ராக்கெட் வெடித்து சிதறிய நிலையில், ஸ்டார்ஷிப் 8-ஐ உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு தெற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 9.30 நிமிடங்களில் ராக்கெட்டுடன் தொடர்பு கட்டுப்பாட்டு அறையினரால் இழக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. குறிப்பிட்ட வான்வழித்தடத்தில் இயக்கப்படும் விமானங்களை நிறுத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பின்னர், கட்டுப்பாட்டை இழக்கும் சூழ்நிலையில் ராக்கெட் தானாகவே வெடிக்கச் செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டது.ராக்கெட்டின் எரிந்த பாகங்கள் கரீபியன் கடற்பகுதியில் விழுந்தன. எரிந்துகொண்டே பூமியை நோக்கி வரும் பாகங்களை பலர் வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராக்கெட்டின் பாகங்கள் விழுந்த பகுதிக்கு அருகிலுள்ள 5 விமானங்கள் இரவுவரை தற்காலிகமாக மூடப்பட்டன. அங்கு தரையிறங்கவிருந்த விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பப்பட்டன. இதுகுறித்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சார்பில் செய்தி வெளியானது. அதில் ராக்கெட் குப்பைகளில் எந்தவொரு நச்சு பொருளும் இல்லாததால், கடல் உயிரினங்கள் மற்றும் நீரின் தரத்திற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. இந்த வகையான ஆய்வுகள் மூலம், நாம் புதிய தகவல்களைப் பெறுவதில் வெற்றி அடைகிறோம். இன்றைய ஸ்டார்ஷிப், நம்பகத்தன்மையை மேம்படுத்துவதில் உதவியாக இருக்கும். அமெரிக்க விமானத்துறையுடன் இணைந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.

