அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதிலிருந்து, அவர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சீன பொருட்களுக்கு அதிக வரிகள் விதிக்கப்படும் நிலையில், சீனா தனது சந்தையில் அனுமதிக்கப்பட்ட ஹாலிவுட் படங்களின் எண்ணிக்கையை குறைப்பதாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு வெளியான ஒரு மாதத்திற்குள், தற்போது டிரம்ப்பின் கவனம் திரைப்படத்துறை மீது மாறியுள்ளது. இது குறித்து டொனால்ட் டிரம்ப் கூறியதாவது, அமெரிக்க திரைப்படத் துறை தற்போது மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பிற நாடுகள், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டுடியோக்களை தங்கள் நாட்டிற்கு அழைத்து வர பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஹாலிவுட் மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகள் தற்போது பேரழிவை எதிர்கொள்கின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாகவே இருக்கிறது, எனவே, இது ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் கருதப்படுகிறது. மேலும், நமது நாட்டிற்குள் வரும் வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாக தொடங்க வணிகத் துறைக்கும், அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கும் நான் அதிகாரம் அளிக்கிறேன். ‘எங்களுக்கு மீண்டும் அமெரிக்காவில் திரைப்படங்கள் வேண்டும்’ என டிரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.

