கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது. வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் காலை முதலே ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் பூங்கொத்துகள் கொடுத்து வரவேற்றது மாணவர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.
