தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் உயிரிழந்தார். இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். கன்னிப் பருவத்திலே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ராஜேஷ். நடிகர் ராஜேஷ் பன்முகத்தன்மை திறமைகளை கொண்ட நடிகர். ‘அந்த ஏழு நாட்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘சத்யா’, ‘விருமாண்டி’, ‘மகாநதி’ போன்ற பல படங்களில் அவர் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படம் இவரது கடைசி படமாக அமைந்தது.திரைத்துறையைத் தாண்டி, சமூகவலைதளங்களில் ஆரோக்கியம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அதில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். புத்தக வாசிப்பு குறித்து பேசுவதிலும் ஆர்வம் கொண்டவர். ராஜேஷ் ஒரு பன்முகத் திறமையாளர், சிறந்த மனிதர் மற்றும் நல்லொழுக்கம் நிறைந்தவர் என திரையுலகினர் பலரும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

