தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள த.வெ.க. தீவிரமாக இறங்கி உள்ளது. த.வெ.க சார்பாக ‘மக்கள் விரும்பும் முதல்-அமைச்சர் வேட்பாளர்’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டமைப்பு பணிகளை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த மை டிவிகே (MY TVK) என பெயரிடப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். செயலியை ஆரம்பித்த பிறகு, உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை விஜய் வழங்கினார். தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை முன்னெடுப்பை விஜய் இன்று தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

