மராட்டிய மாநிலத்தில் முன்பு எப்போதும் காணாத அளவுக்கு தற்போது கன மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. தலைநகர் மும்பையில் தொடர்ந்து 4-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. போரிவலி, அந்தேரி, சியோன், தாதர், செம்பூர் உள்ளிட்ட நகரத்தின் பல பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. சாலைகள் எங்கு பார்த்தாலும் வெள்ளமாக காட்சி அளித்ததால் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. பல இடங்களில் பஸ்கள் மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டன. பல இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் மும்பையில் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. அரசு மற்றும் பல்வேறு தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

