சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் நவம்பர் 23, 2025 வரை என நிர்ணயிக்கப்பட்ட உரிமம் பெறும் காலக்கெடு, பின்னர் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது தொடர்ச்சியான மழையையும், மக்கள் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி இந்த காலக்கெட்டினை மேலும் ஒரு வாரம் நீட்டித்து, டிசம்பர் 14, 2025 வரை மாற்றியுள்ளது.திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 மாநகராட்சி செல்லப்பிராணி சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும், மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய் நோய் தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வாரம் முழுவதும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இலவசமாக நடைபெறுகின்றன. 14.12.2025க்குள் உரிமம் பெற்றால் அபராதம் தவிர்க்கலாம் என்றும், இதுவரை 91,711 செல்லப்பிராணிகள் பதிவு செய்யப்பட்டு, 45,916 பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

