கரூர் விவகாரம் பரபரப்பு: டெல்லி CBI அலுவலகத்தில் ஆஜரான தவெக தலைவர் விஜய்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நீதி மன்றம் விபத்துகள்

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கட்சியின் பரப்புரை நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர்.விசாரணையின் ஒரு பகுதியாக, பரப்புரை நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தவெக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.அதன்படி, ஜனவரி 12ஆம் தேதி காலை, விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார். பின்னர் அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் காரில் பயணம் செய்து சிபிஐ அலுவலகத்தை சென்றடைந்தார். அவருடன் தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.சிபிஐ அதிகாரிகள் விஜயிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்பாக ஒப்புதல் கையெழுத்து பெறப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு விஜயிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நாளையும் விசாரணை நடைபெறும் என முதலில் கூறப்பட்ட நிலையில், விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் ஆஜராக வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *