ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பியுள்ளார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும், டெல்லியில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணியில் அமைதியாக பங்கேற்ற மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என சிஜேபி அறிவித்திருந்தது. மேலும், எதிர்க்கட்சிகளும் அவரது ராஜினாமாவை வலியுறுத்தி வந்தன. இதனால், கடந்த 5 நாட்களாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இளைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி விலகுவதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், முதல் நாளிலிருந்தே இந்த விவகாரத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், போராட்டங்கள் தேசவிரோத சக்திகளின் ஆதரவாக மாறக்கூடாது என்றும், சட்ட நடவடிக்கைகளால் ஒரு மாணவரின் எதிர்காலம் கூட பாதிக்கப்படக் கூடாது என்றும் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஆதரவளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.ஒன்றிய அமைச்சர்கள் பதவி விலகக் கோரி இதற்கு முன்பும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், நீண்டகால போராட்டங்களுக்கு மத்தியிலும் அமைச்சர்கள் ராஜினாமா செய்யாத நிலையில், இந்த விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

