தமிழ்நாடு தேர்தல் 2026: அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடியார்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஃபிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷனில் ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் இலவசம். வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்; மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் வழங்கப்படும் என்று கூறினார்.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இன்றைய தினம் எம்ஜிஆர் மாளிகைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, 297 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை- பாலக்காடு சாலை, மதுக்கரை, செட்டிபாளையம் பிரிவு முதல் அவிநாசி சாலையில் நீலாம்பூர் சந்திப்பு வரையிலான எல் அன்ட் டி பைபாஸ் 4 வழிச் சாலையை 6 வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படும். சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகர பகுதிகளில் வாகன நிறுத்த தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் உதவியுடன் கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளை விரைவுப்படுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
சென்னை வெள்ள தடுப்பு பணிகள் முழுமையாகவும் முறையாகவும் நிறைவேற்றப்படும். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் சார்ந்த கடற்கரை பகுதிகள் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கடல் சார் விளையாட்டு மையம் ஏற்படுத்தி படகு சவாரி, அலைச் சறுக்கு, ஸ்கூபா டைவிங், வாட்டர் போலோ, ஃப்ரீ டைவிங் போன்ற விளையாட்டுகள் சர்வதேச அளவிலான பிரபல நிறுவனங்களின் பங்களிப்புடன் வேர்ல்டு கிளாஸ் வாட்டர் தீம் பார்க் அமைக்கப்படும்.
மெரினாவில் மீன் உணவகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் ராமேஸ்வரம்- தனுஷ்கோடி ஆகிய இடங்களில் உலகத் தரத்தில் கடல் சுற்றுலா வசதிகள் ஏற்படுத்தப்படும். மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும். வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 10 ஆயிரம் சிறப்பு உதவித் தொகை அளிக்கப்படும். மகளிர் நலன் காக்க குல விளக்கு திட்டம். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ 2000 வழங்கப்படும். இந்த தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகர பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு 297 வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *