2027 முதல் ஆன்லைனில் NEET தேர்வு? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு

அரசியல் இந்தியா உயர்கல்வி கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் மருத்துவம் முதன்மை செய்தி வேலைவாய்ப்புச் செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை தேர்வை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்கிறோம் என்றும், தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். முறைகேடு நடந்தது தெரியவந்தவுடன் தேர்வை ரத்து செய்வதே சரியான முடிவு என கருதினோம் என்றும், இந்த விவகாரத்தில் சிபிஐ முழுமையான விசாரணை நடத்தும் என்றும் கூறினார். தவறு செய்தவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் அவர் எச்சரித்தார். மேலும், மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை என்றும், எந்த கட்டணமும் இல்லாமல் தேர்வு எழுதலாம் என்றும் தெரிவித்தார். மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் நேரம் வழங்கப்படும் என்றும், விரும்பினால் தேர்வு நகரங்களை மாற்ற ஒரு வார அவகாசம் வழங்கப்படும் என்றும் கூறினார். புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும், அனுமதி அட்டைகள் ஜூன் 14ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இனி முறைகேடுகளை தடுக்க ஓஎம்ஆர் தாள்முறைக்கு பதிலாக கணினி வழி ஆன்லைன் தேர்வு முறை கொண்டு வரப்பட உள்ளது என்றும், இது பாதுகாப்பான மற்றும் சிறந்த முறையாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *