டில்லி ஜனாதிபதி மாளிகையில் மே 25 அன்று நடைபெற்ற விழாவில், நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி சாதனையாளர்களை கவுரவித்தார்.கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்குகிறது. பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ என்ற மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.இன்று நடைபெற்ற முதல் கட்ட விழாவில் 66 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 2 பேருக்கு பத்ம விபூஷண், 6 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 58 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு அடுத்த கட்ட விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பத்ம பூஷண் விருது பெறுவோரில் நடிகர் மம்மூட்டி, முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி மற்றும் சமூக சேவகர் எஸ்.கே.எம். மயிலானந்தன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

