திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 83 பேரில் இதுவரை 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், நிறுவனத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 டன் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றப்பட்டன. மேலும், நிறுவன வளாகத்தில் இருந்த அமோனியா வாயுவை பாதுகாப்பாக அகற்றும் பணிகள் கடந்த ஜூலை 4-ஆம் தேதி தொடங்கி பல்வேறு தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டன.முதல் கட்டமாக சேமிப்பு தொட்டிகளில் இருந்த 2.9 டன் அமோனியா வாயு அகற்றப்பட்டது. தொடர்ந்து, குளிரூட்டும் அறைகள், பதப்படுத்தும் கிடங்குகள் மற்றும் குழாய்களில் தேங்கியிருந்த சுமார் 700 கிலோ அமோனியா வாயு சல்பியூரிக் அமிலம் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டு அகற்றப்பட்டது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவின் பேரில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் முன்னிலையில், நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம், தொழிலாளர்கள் தங்கும் விடுதி, உணவுப் பொருட்கள் பதப்படுத்தும் பிரிவு மற்றும் அமோனியா சேமிப்பு தொட்டிகள் அமைந்திருந்த வளாகங்களுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.மேலும், நிறுவன வளாகத்தில் உள்ள சிறிய அளவிலான கழிவுகள் மற்றும் வாகனங்களை அகற்றும் பணிகள் முடிவடைந்த பிறகு, நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலும் ஜூலை 9-ஆம் தேதி முழுமையாக மூடப்பட்டு ‘சீல்’ வைக்கப்படும் என திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.

