மேகதாது அணை திட்டத்திற்கு பெரிய பின்னடைவு! கர்நாடகா DPR-ஐ நிராகரித்த காவிரி நதிநீர் ஆணையம்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரித்துள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழ்நாடு எல்லையை ஒட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.முதலில், 2019-ஆம் ஆண்டு கர்நாடக அரசு மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அப்போது அந்த அறிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், தேவையான திருத்தங்களை செய்து புதிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, 2019-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் புதிய விவரங்களை சேர்க்க அனுமதி கோரி, 2026 ஏப்ரல் 21-ஆம் தேதி கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது. ஆனால், அந்த அறிக்கையில் இடம்பெற்ற சில அம்சங்கள் காவிரி நடுவர் மன்றம் மற்றும் 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக இருப்பதாகக் கூறி, மத்திய நீர் ஆணையம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி மீண்டும் அந்த அறிக்கையை கர்நாடக அரசுக்கே திருப்பி அனுப்பியது.இந்த தகவல், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் கேட்ட கேள்விக்கு மத்திய நீர் ஆணையம் அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.மேலும், ஆரம்பத்தில் இந்த திட்டம் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக மட்டுமே என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் சிவனசமுத்திரம் நீர்மின் உற்பத்தி திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூரின் தற்போதைய குடிநீர் தேவை, காவிரியில் இருந்து தற்போது பயன்படுத்தப்படும் நீரின் அளவு போன்ற முக்கிய தகவல்கள் முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.இதனால், தேவையான திருத்தங்களை செய்து மீண்டும் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திருத்தப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய நீர் ஆணையம் முடிவு எடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *