அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமிஷ் ஷா வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் அரிசோனா மாகாணத்திலிருந்து அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 48 வயதான மருத்துவர் அமிஷ் ஷா, அரிசோனாவின் முதல் காங்கிரஸ் தொகுதியில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் NFL கால்பந்து வீரருமான ஜே ஃபீலியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்தத் தேர்தலில் அமிஷ் ஷா 52.49 சதவீத வாக்குகளையும், அவரது எதிரணி வேட்பாளர் 45.45 சதவீத வாக்குகளையும் பெற்றதாகத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அரசியலில் நுழைவதற்கு முன்பு மருத்துவராகப் பணியாற்றிய அமிஷ் ஷா, அரிசோனா மாகாண சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.
சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி வந்தார்.தனது தேர்தல் பிரசாரத்தின்போது மருத்துவச் செலவுகளைக் குறைப்பது, மக்களின் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது, வாக்குரிமையைப் பாதுகாப்பது, அரிசோனாவின் தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவற்றை முக்கிய வாக்குறுதிகளாக முன்வைத்தார்.இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறாவது இந்திய அமெரிக்கர் என்ற பெருமையையும் அமிஷ் ஷா பெற்றுள்ளார்.அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர் தொடர்ந்து முக்கியப் பொறுப்புகளைப் பெற்று வரும் நிலையில், அமிஷ் ஷாவின் வெற்றி அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
