பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சிங்கப்பெண்கள் அதிரடிப்படை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசியல் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு பெண்கள் முதன்மை செய்தி

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்துவதற்கும் தமிழக காவல்துறை சார்பில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பவன்குமார் தலைமையில் கோவை மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை பணிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன.
எஸ்ஐ ரோசினா பானு தலைமையிலான சிறப்பு குழுவினர், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், வணிக வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இணையவழி மோசடிகள், சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகள், அவசர உதவி எண் 1098 மற்றும் காவல்துறையின் பாதுகாப்பு சேவைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், பிரச்சினைகள் அல்லது குற்றச்செயல்கள் குறித்து எந்தவித தயக்கமும் இன்றி காவல்துறையை அணுக வேண்டும் என்றும், அவர்களின் பாதுகாப்புக்காக காவல்துறை எப்போதும் துணை நிற்கும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.
சமூகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *