செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் ஒரு தற்கொலைப்படை தாக்குதல்; என்.ஐ.ஏ. அறிக்கை

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் போராட்டம்/ கலவரம் மற்றவை முதன்மை செய்தி

டெல்லி, செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் கேட் 1 அருகே கடந்த 10ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு கார் வெடிகுண்டு வெடிக்கவைக்கப்பட்டு, பெரும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில், 13 பேர் பரிதாபமாக பலியான நிலையில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் மருத்துவர்களாக இருக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்ந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய காஷ்மீரைச் சேர்ந்த அமிர் ரஷித் அலி என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தற்போது செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக செய்தி அறிக்கை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ. அமைப்பு, இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் எனத் தெரிவித்துள்ளது. இதனால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், டெல்லி செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதல். இதில், காரில் வந்து வெடிகுண்டை வெடிக்கவைத்தது உமர் உன் நபிக்கு கார் வாங்கிக் கொடுத்தது காஷ்மீரைச் சேர்ந்த அமிர் ரஷித் அலி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமிர் ரஷித் அலி, காஷ்மீரில் இருந்து டெல்லி வந்து உமர் உன் நபிக்கு கார் வாங்கிக் கொடுத்துள்ளார். விசாரணையின் அடிப்படையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
மேலும், டெல்லி, ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, உத்தரப்பிரதேசம் காவல்துறையினருடன் சேர்ந்து செங்கோட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் குறித்து விசாரித்து வருவதாகவும், இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *