பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் இந்த முறை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.உச்ச நீதிமன்றம், பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை தொடர்ந்து, காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளன. ‘கிரேட்டர் பெங்களூரு’ அமைப்பின் கீழ் உள்ள 5 மாநகராட்சிகளுக்கும் மே 25-ம் தேதிக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையர் ஜி.எஸ். சங்கரேஷி தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்கள் அனைத்தும் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு பெங்களூருவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெறுகிறது. மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாய சட்டம் இல்லை என்றும், உச்ச நீதிமன்றமும் அதற்கான ஆணை பிறப்பிக்கவில்லை என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சிகளில் மொத்தம் 369 வார்டுகள் உள்ளன. இதில் 88.91 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தேர்தலை சீராக நடத்த 8,044 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. வாக்குச்சீட்டு முறை எளிமையானதும், நம்பகமானதும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

