பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆண்டு தோறும் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்திலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பினை அதிகரிக்க தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி 1 லட்சத்து 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோக முக்கியமான இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவம், மங்களூரு குக்கர் வெடிகுண்டு வெடிப்பு ஆகியவற்றால் இந்த முறை கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் இரவு ரோந்து பணிகள், வாகன தணிக்கைகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.