பிறப்புச் சான்றிதழை முக்கிய ஆவணமாக பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம் 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும். இந்த திருத்தப்பட்ட சட்டம் அமலுக்கு வருவதன் மூலம் பல முக்கிய பணிகளில் பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படும். அதாவது கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், ஆதார் எண், திருமணப் பதிவு, அரசுப் பணி நியமனம் போன்றவற்றுக்கு ஒரே ஆவணமாக இதை பயன்படுத்தலாம்.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தப்பட்ட மசோதா ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஆகஸ்ட் 1-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம் 1969 நடைமுறைக்கு வந்து 54 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக திருத்தப்பட்டுள்ளது.

