மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்ரவரி 28 அன்று திறக்கிறார் என எய்ம்ஸ் தலைவர் நியூஸ்18-க்கு தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரைக்காக வரும் 28ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டடத்தை திறந்துவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மதுரை தோப்பூரில் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 5 ஆண்டுகள் கழித்து, கடந்த 2024 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதற்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கின.
இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி தேர்தல் பரப்புரைக்காக மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் மண்டேலா நகரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். எனவே, அன்றைய தினம், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதற்கட்ட கட்டடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், வரும் மார்ச் மாதத்தில் இருந்து மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டடத்தில் மாணவர்கள் கல்வி கற்பார்கள் என்றும் அதன் தலைவர் பிரசாத் லவானியா நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்டத்தில் மீதமுள்ள உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, முழு கட்டுமானமும் பிப்ரவரி 2027க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

