சென்னையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மின்னஞ்சல் மூலம் நடிகை திரிஷாவின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதா? அச்சுறுத்திய மர்ம நபர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
த.வெ.க. கூட்ட அசம்பாவிதத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலகங்கள் என பல்வேறு இடங்களுக்குத் தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளும் பட்சத்தில், அவ்வெடிகுண்டு மிரட்டலானது வெறும் புரளி எனவும் தெரிய வருகிறது.
இருப்பினும் வெடிகுண்டு மிரட்டலை, அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. எதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அவ்வளவுதான்.. இதனால் மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனே போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தியபோது, அது வெறும் புரளி என தெரியவந்தது. இதே போல சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இல்லம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளன.
ஒரே நாளில் தமிழ்நாட்டில் இப்பெரும் பிரளயத்தை கிளப்பி பரபரப்பாக்கிய தூண்டிய மர்ம நபர் யார்? எங்கிருந்து மெயிலில் மிரட்டல் விடுக்கிறார்? என விசாரணையை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே தவெக தலைவர் விஜய் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
