சென்னையில் வெடிகுண்டு மிரட்டலுக்கு ஆளான தனியார் பள்ளிகள்; மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என போலீஸ் வாக்குறுதி

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வினோதங்கள்

சென்னையில், வியாழக்கிழமையான இன்று வழக்கம்போல பள்ளிகள் இயங்கிக்கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னையில் 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக திடீர் மிரட்டல் விடுக்கப்பட்டது. அண்ணா நகர், முகப்பேர், திருமழிசை பாரிமுனை, கோபாலபுரம், பட்டினம்பாக்கம், ஓட்டேரி, எழும்பூர், காட்டுப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி உள்ளிட்டபகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மிரட்டல் வந்திருந்தது. தகவலின்பேரில், உடனடியாக பள்ளிகளுக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் சார்பில் வாட்சாப் மற்றும் மின்னஞ்சல் மூலமாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதில், பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், உடனடியாக வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், பதற்றமடைந்த பெற்றோர், பள்ளிகளுக்கு விரைந்து, தங்களது பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர். பதற்றத்தால், சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள், பிற்பகலுக்கு மேல் விடுமுறை அறிவித்தன. ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தங்களது பிள்ளைகளை அழைத்துச் செல்ல குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ள காவல்துறை, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *