ஆதார் அட்டை பயன்பாட்டிற்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள்

மத்திய அரசு ஆதார் அட்டையின் பயன்பாட்டிற்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி முழுமையாக தனிநபர் பாதுகாப்பை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமாக மாறியுள்ளது. திடீர் பயணங்களில் வெளியூரில் ஓட்டல்களில் தங்குவதற்கும் ஆதார் கட்டாயமாக தேவைப்படுகிறது, இதனால் மக்கள் செல்லும் இடங்களில் எப்போதும் ஆதாரை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய சூழ்நிலைகளில் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதும், தவறாக பயன்படுத்தப்படுவதும் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளை தீர்க்க, மத்திய அரசு யு.ஐ.டி.ஏ.ஐயின் உதவியுடன் ஆதார் செயலியை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இது டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு உரிய செயலியாக தோன்றுகிறது, மேலும் கியூ ஆர் கோடு மற்றும் முக அடையாளம் அடிப்படையிலான ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தனிநபர்கள் இதனை பயன்படுத்தலாம். 100 சதவீதம் தரவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆதார் செயலியை பயனாளர்கள் எவ்வாறு பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதற்கான தகவலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கூகுள் பிளே அல்லது ஆப்பிள் ஸ்டோரில் mAadhar என்ற செயலியை முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு, அந்த செயலியை திறந்து 12 இலக்க ஆதார் எண்ணையும், அதனுடன் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணையும் உள்ளீடு செய்து, ஒடிபி மூலம் சரிபார்க்க வேண்டும். இதற்குப் பிறகு, இ ஆதார் அட்டையை பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்யலாம். ஆதார் வீட்டா வர்ஷன் செயலியின் அறிமுகம் மூலம், இனி ஆதார் அல்லது அதன் நகலை எங்கு சென்றாலும் எடுத்துச் செல்ல தேவையில்லை. மேலும், முக அடையாளம் மூலம் செயலி செயல்படும் என்பதால், 100 சதவீதம் தரவுப் பாதுகாப்புடன் தேவையான தகவல்களை மட்டுமே வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆதார் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், அனைத்து பயனாளர்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில் இது விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *