சென்னையில் சுய உதவிக் குழு நடத்தும் பெண்கள் பங்குபெறும் உணவு திருவிழா; டிசம்பர் 24ஆம் தேதி வரை

ஆரோக்கியம் இந்தியா சமையல் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மண்மணம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்‌ சார்பில்‌ மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா இன்று மாலை தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிசம்பர் 24 வரை நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு சத்தான, சுகாதாரமான, பாரம்பரிய உணவுகளை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இங்கு மொத்தம் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 65 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயாரித்து வழங்குகின்றனர்.
இதில் கோவை கொங்கு மட்டன் பிரியாணி, நீலகிரி ராகி களி, வெண்டைக்காயுடன் கூடிய நீலகிரி ராகி களி, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், மயிலாடுதுறை இறால் வடை, சென்னை தாஹிப்பூரி, கன்னியாகுமரி பழம்‌ பொறி, மதுரை கறி தோசை, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, திருப்பூர்‌ முட்டை ஊத்தாப்பம்‌, தருமபுரி ரவா கஜூர்‌, சிவகங்கை மட்டன்‌ உப்புக்கறி, விருதுநகர்‌ கரண்டி ஆம்லெட்‌, போன்ற உணவு வகைகள் உள்ளன.
அரியலூர் வறுத்த முந்திரி, தென்காசி தேன்‌ நெல்லி, சென்னை கடலை மாவு லட்டு, திருச்சி மணப்பாறை முறுக்கு, செங்கல்பட்டு நாட்டுச்சர்க்கரை எள்ளுருண்டை, கோவை பீட்ரூட்‌ மால்ட்‌ பொடி, மதுரை தொத்தல்‌, தருமபுரி குதிரைவாலி ரோஸ்‌ லட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர்‌ பால்கோவா, நீலகிரி ஸ்ட்ராபெர்ரி ப்ளூபெர்ரி, திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட 67 ரெடி-ஈட் பொருட்கள் ஆறு அரங்குகளில் கிடைக்கும்.
மேலும் இந்த உணவுத் திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 45 வகையான கைவினைப்பொருட்கள் மூன்று ஸ்டால்களில் கிடைக்கும். டிசம்பர் 21 முதல் 24 வரை மதியம் 12:30 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் மக்கள் இங்கு செல்லலாம். அனுமதி இலவசம்.
உணவுத் திருவிழாவுக்கு வரும் மக்களின் வசதிக்காக சென்னைப் பல்கலைக் கழகம், லேடி விலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரி வளாகங்களில் வாகனங்களை இலவசமாக நிறுத்தி கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *