திருநெல்வேலி நீதிமன்ற வளாகத்தில் இளைஞர் வெட்டி படுகொலை; போலீசார் கண்முன்னே நடந்த பயங்கரம்

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் நீதி மன்றம் மற்றவை முதன்மை செய்தி

திருநெல்வேலியில் நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்தவரை கொலை செய்தது யார்? நீதிமன்றத்திற்குள் அரிவாள் போன்ற ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டது எப்படி? போலீசார் கண் முன்னே நடந்த கொலையின் பின்னணி என்ன?
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் மாநகர பகுதிக்குள்ளேயே திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ளது. நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வழக்கு தொடர்பாக வந்து செல்வதுண்டு. எப்போதும் பரபரப்பாக காணப்படும் நீதிமன்ற வளாக வாசலில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவார்கள். வாசலில் சோதனைகளுக்குப் பிறகு அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் இன்று காலை 10:20 மணியளவில் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே இருந்து ஏழு பேர் கொண்ட கும்பல் ஒரு நபரை கொலை செய்வதற்காக அரிவாளுடன் விரட்டி வந்தனர்.
நீதிமன்றத்திற்கு வெளியே வாசலில் அந்த நபரை சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலை செய்து விட்டு அந்த கும்பல் அரிவாளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நின்ற நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் உய்க்காட்டான் மட்டும் கொலையாளிகளை துரத்திக் கொண்டு ஓடினார். அதில் கொலைகார கும்பலை சேர்ந்த ஒருவரை மட்டும் எஸ்.ஐ. உய்க்காட்டான் லாவகமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்.
கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து அரிவாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *