சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு இன்று முதல் நாளை மறுநாள் வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை, ஈவெரா சாலை வழியாக செல்லலாம்.
அண்ணா சாலையில், வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில், சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும். சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும் என்றும் காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை என்றும் மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன் சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. (அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை, ஈவெரா சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், பெரியமேடு காந்தி இர்வின் சாலை வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்.
தீவுத்திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈவெரா சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்படுவதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

