சினிமா பைனான்சியர்கள், தயாரிப்பாளர்களை குறிவைக்கும் வருமான வரிச் சோதனை

அரசியல் சினிமா தமிழ்நாடு

தமிழ் சினிமா பைனான்சியர்கள், தயாரிப்பாளர்களை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை கடந்த மூன்று நாட்களாக தொடர்கிறது. இந்த சோதனையில் சிக்கிய முக்கிய புள்ளியாக பார்க்கப்படுபவர் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அவர்கள். இவர் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகவும் பிரபலம். பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு இவர் பைனான்ஸ் செய்து வருகிறார். அதுட்டுமல்லாது இவர் கோபுரம் பிலிம்ஸ் என்ற சனிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
ஏற்கனவே 2020ம் ஆண்டு இவரின் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் வருமான வரிச் சோதனை நடைப்பெற்றது என குறிப்படத்தக்கது. அன்புச்செழியன் 2.0, பிகில் போன்ற படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர் என்பது கூடுதல் தகவல். அத்திரைப்படங்கள் வசூல் சாதனை செய்து அதற்கு வரி ஏய்ப்பு செய்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து சோதனைக்கு ஆளானார். மீண்டும் இம்முறை வருமான வரித் சோதனைக்கு உள்ளாகியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியனுக்கு சொந்தமான டி.நகர், நுங்கம்பாக்கம் வீடுகள் மற்றும் அலுவலகம் என மொத்தம் 10க்கும் மேற்பட்ட இடத்தில் இச்சோதனை நடைபெற்றுவருகிறது. செவ்வாயன்று தொடங்கிய சோதனை மூன்றாவது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது. அன்மையில் வெளியாகி வசூல் சாதனை செய்த விக்ரம் திரைப்படத்திற்கும் அன்புச்செழியனே பைனான்ஸ் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதலில் அத்திரைப்படத்தை இவர் வெளியிடுவதாக இருந்தது. பின்னர் உதயநிதி ரெட்ஜெயின்ட் மூவிஸ்க்கு கைமாறியது.
அன்புச்செழியனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தானு அவர்களின் அலுவலகம், வீடு என அனைத்து இடங்களிலும் வருமான வரிச் சோதனை நடைப்பெற்று வருகிறது. இவரை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நெருங்கிய உறவினர் எஸ்.ஆர். பிரபு அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைப்பெற்று வருகிறது. இதற்கிடையில் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஞானவேல்ராஜாவும் வருமான வரிச் சோதனையிலிருந்து தப்பவில்லை. இவரும் நடிகர் சூர்யாவின் நெருங்கிய உறவினராவார்.
தமிழ் சினிமா உலகில் கருப்புப் பணம் அதிகளவில் புழங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ள நிலையில் தயாரிப்பாளர்கள் சோதனையில் இம்முறை சிக்கியுள்ளது கோடம்பாக்கத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *