விமானத்தில் பெண் பயணி மீது ஆண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததாக எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த நவம்பர் 26-ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பிஸினஸ் க்ளாஸ் பிரிவில் 70 வயது பெண் ஒருவர் பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த ஷங்கர் மிஸ்ரா மது அருந்திய நிலையில், அந்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண், ஏர் இந்தியா நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் கடந்த 4ம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். எனினும், அவர் தலைமறைவாக இருந்த நிலையில் அவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அந்த விமானத்தை இயக்கிய தலைமை விமானியின் உரிமத்தை 3 மாதங்கள் ரத்து செய்துள்ளது. விமான சட்டத்தின் 141-வது விதியின் கீழ் தனது கடமையைச் செய்ய தவறியதாக அந்த பைலட்டின் உரிமத்தை மூன்று மாதம் காலம் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகள் இயக்குநருக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.கடமையை செய்யத் தவறியதாக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.