தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 இன்று காலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.பிப்ரவரி மாதத்திற்கான ரூ.1,000 தொகையுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு உதவியாக ரூ.2,000 சேர்த்து மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில் முதல்வர், மகளிர் உரிமைத்தொகை என்பது தாம் அளித்த உறுதிமொழி என்றும், யார் தடை செய்தாலும் இந்தத் திட்டம் நிறுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலை காரணமாக காட்டி மூன்று மாதங்களுக்கான தொகையை தடுக்க முயற்சி செய்யப்பட்டதாகவும், அதற்கு முன் அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறியுள்ளார்.மேலும், “திராவிட மாடல் 2.0” ஆட்சியில் உரிமைத்தொகையை ரூ.1,000 இலிருந்து ரூ.2,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் குடும்ப நலத்திற்கும் உதவுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

