டிசிஎஸ் தனது வருவாயை அறிவித்ததைத் தொடர்ந்து, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
டிசிஎஸ் தனது ஜூன் காலாண்டு வருவாயை அறிவித்ததை அடுத்து ஐ.டி பங்குகள் இன்று (ஜுலை 12) அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டன. இதன் காரணமாக பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 30 பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 996.17 புள்ளிகள் உயர்ந்து 80,893.51 என்ற வரலாற்று உச்சம் தொட்டுள்ளது. என் எஸ்சி நிப்டி 276.25 புள்ளிகள் உயர்ந்து 24,592.20 என்ற உச்சத்தை எட்டியது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஜூன் காலாண்டில் 8.7 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.12,040 கோடியை நிகர லாபத்தை பெற்றுள்ளது. இதன்காரணமாக இன்போசிஸ், டெக் மஹிந்திரா, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை அதிக லாபத்துடன் கைமாறின.
அதே நேரம் மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி ஆகியவை பின்னடைவை சந்தித்தன. ஆசிய சந்தைகளில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்வை சந்தித்தன. சியோல் மற்றும் டோக்கியோ பங்குசந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.