தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்; பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த கேசிஆர் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

தெலங்கானாவில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த சந்திரசேகர ராவ் அரசை வீழ்த்தி, முதல் முறையாக அரியணை ஏறியிருக்கிறது காங்கிரஸ். சந்திர சேகரராவின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? அவரின் மக்கள் நலத் திட்டங்களை வீழ்த்தி காங்கிரஸ் மணிமகுடம் சூடியது எப்படி? தெலங்கானாவின் ஒவ்வொரு வீதியிலும் காங்கிரஸ் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட காட்சிதான் இது. ஆனால், இது அத்தனை எளிதில் வாய்த்துவிடவில்லை. சந்திர சேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி, 3ஆவது முறையாக அரியணை ஏறி சாதனை படைக்க தீவிர பரப்புரை மேற்கொண்ட நிலையில், அனைத்து வியூகங்களையும் உடைத்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது காங்கிரஸ். பி.ஆர்.எஸ் கட்சி கடந்த 10 ஆண்டுகளில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்தி புதிய வாக்குறுதிகளையும் அள்ளி வீசியது.
முந்தைய திட்டங்களால் பலன் அடையாதோரின் கோபம், திட்டங்களை செயல்படுத்துவதில் ஆளும் கட்சியினருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டவை அக்கட்சிக்கு எதிராக அமைந்தன. காலேஷ்வர் அணைத்திட்ட ஊழல், மதுபான ஊழல், கோழித்தீவன ஊழல் என அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் அணிவகுக்க, குடும்ப அரசியல் குற்றச்சாட்டும் பி.ஆர்.எஸ் கட்சிக்கு எதிராக மிரட்டியது. அக்கட்சியின் முதல் ஐந்து பதவிகளுமே கேசிஆர் குடும்ப உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. மகனும் மருமகனும் அமைச்சர்கள், மகள் எம்எல்சி என அவரின் குடும்பத்தை சுற்றியே ஆட்சி அதிகாரம் குழன்று வந்தது.
இந்த சூழலில் தான், கடந்த ஒன்னரை ஆண்டுகளில் தெலங்கானாவில் காங்கிரஸின் தளத்தை வலுவாக கட்டி அமைத்தார் அம்மாநில காங்கிரஸின் முகமாக பார்க்கப்படும் ரேவந்த் ரெட்டி. நாளொன்றுக்கு 4 போராட்டங்களில் பங்கேற்று பி.ஆர்.எஸ் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால் மக்கள் மத்தியில் ரேவந்த் ரெட்டி பிரபலமானார். 2021ல் தலைவராக அறிவிக்கப்பட்ட போதே பல்வேறு எதிர்ப்புகளை சமாளித்து, தெலங்கானாவில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையை திட்டமிட்டார். ஆளுங்கட்சி மீதான குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் அம்பலப்படுத்தி, வெகுஜன மக்களின் போராட்டமாக மாற்றியதும் ரேவந்த் ரெட்டியின் சக்சஸ் ஃபார்முலாவானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *