டில்லியில் பெண் ஒருவரை காரில் 4 கி.மீ தூரத்திற்கு இழுத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அப்பெண் உயிரிழந்தார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் ஜனவரி 1 நள்ளிரவு, 20 வயதுடைய அஞ்சலி என்ற பெண், தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, அவர் வண்டி மீது எதிரே வந்த கார் மோதியது. இதில் காரின் அடியில் சிக்கிய அப்பெண்ணை 4 கிலோமீட்டர் தூரத்திற்கு கார் இழுத்து சென்றுள்ளது. இதனால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து காரை அடையாளம் கண்ட போலீஸ் அதிகாரிகள், 5 பேரை கைது செய்தனர். மேலும், நீண்ட தூரத்திற்கு காரில் இழுத்துச் சென்றதால் பெண்ணின் ஆடை கிழிந்து, நிர்வாண நிலையில் இருப்பதும் சிசிடிவியில் தெரியவந்தது.
இது மிகவும் அரிதான குற்றமாகும். சமூகம் எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது. இது ஒரு மிகவும் வெட்கக்கேடான சம்பவம். குற்றம் சாட்டப்பட்டவர்கள், யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், தூக்கிலிட வேண்டும் என்று நான் கவர்னர் வி.கே.சக்சேனாவிற்கு வேண்டுகோள் வைக்கிறேன்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த சம்பவம் தொடர்பாக கவர்னரிடம் பேசினேன். குற்றவாளிகள் மீது கடுமையான சட்டங்களை கொண்டு முன்மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எப்பேற்பட்ட அரசியல் தொடர்புகள் இருந்தாலும், மென்மை காட்டக்கூடாது என வலியுறுத்தினேன்’. அவர் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
![](https://nritamil.com/wp-content/uploads/2023/01/images-23.jpeg)