கனடாவில் தமிழ்ப் பெருங்குடிமக்கள் நலத்தோடும் வளத்தோடும் வாழ்ந்து வருகின்றனர். கனடா நாட்டின் அரசியல், வணிகம், கல்வி, மருத்துவம், ஊடகம் போன்ற துறைகளில் தமிழர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கல்வி கற்பிக்கப்படுவதோடு, பலர் தமிழை ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்ப் பண்பாட்டு மாதமாகக் கொண்டாடப்படுகிறது, இதில் பொங்கல் திருவிழா முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. கனடாவில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகம் தமிழ்க் கல்விக்குப் பெரும் பங்காற்றியது. ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இளங்கலை மற்றும் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயில்வதற்கான அந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் அண்மைக்காலமாகத் தொய்வு ஏற்பட்டதால், தமிழ்க்கல்வி கனடாவில் பாதிப்படைத்துள்ளது. இக்குறை விரைவில் சரிசெய்யப்பட வேண்டும் என அம்மக்கள் விரும்புகின்றனர்.இந்த சூழலில் தொல்காப்பியத்தை மேம்படுத்தும் நோக்கில் கனடா – தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களின் முயற்சியால் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இதன் விளைவாக, கனடா உலகத் தொல்காப்பிய மன்றம், தமிழகத்தின் இலக்குவனார் இலக்கிய இணையத்தின் ஒத்துழைப்புடன் 2024, செப்டம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியது.உலகளாவிய மாநாட்டை நடத்துவதற்கு பலரின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள் மற்றும் முக்கிய பொருட்செலவுகள் தேவைப்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்நிலையில், முனைவர் செல்வநாயகி சிறிதாசு அவர்களின் தலைமையில் செயல்பட்ட அறிவார்ந்த குழு, மாநாட்டுக்கான திட்டமிடலுடன் மூன்று நாள் மாநாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தது. முதல் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கனடாவின் இசுகாபுரோ நகரில் உள்ள இசுகாபுரோ குடிமை நடுவத்தில் நடைபெற்றது. மூன்றாம் நாளான செப்டம்பர் 22 அன்று, மாநாட்டின் நிறைவு விழா தமிழ்க் கலா மன்றத்தில் நடைபெற்றது.இந்த மாநாட்டில் ஆய்வரங்கம், சிறுவர் பேச்சு, கண்காட்சி, விநாடி வினா (சிறுவர் மற்றும் பெரியவர்), தமிழ்த்திறன் போட்டிகள், பரிசளிப்பு, சதிராட்டம், நடனம், குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம், அன்பின் ஐந்திணைக் கவியரங்கம், பறையிசை, காத்தவராயன் கூத்து, தொல்காப்பியம் வில்லுப்பாட்டு போன்ற பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டு, அனைவரையும் ஈர்க்கும் வகையில் நடத்தப்பட்டன.