ஏஐ மூலம் மாற்றப்பட்ட ‘ராஞ்சனா’ க்ளைமாக்ஸ் குறித்து தனுஷ் கண்டனம்.

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் பொழுதுபோக்கு

’ராஞ்சனா’ படத்தின் க்ளைமாக்ஸ் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றப்பட்டதற்கு நடிகர் தனுஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திப் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமானார் நடிகர் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கதாநாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி வரவேற்பையும் பெற்றது. தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலும் வெளியானது. இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியினை தற்போது ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்மையில் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இதற்கான அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், தற்போது நடிகர் தனுஷும் இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனுஷ் வெளியிட்ட அறிக்கையில், “ஏஐ மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ‘ராஞ்சனா’ படம் மீண்டும் வெளியிடப்பட்டது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. மாற்றப்பட்ட இறுதிக் காட்சி, படத்தின் உண்மையான ஆன்மாவை அழித்துவிட்டது. எனது தெளிவான எதிர்ப்பை மீறி, படக்குழு இதைச் செய்துள்ளது. திரைப்படங்களையும், உள்ளடக்கங்களையும் ஏஐ உதவியுடன் மாற்றுவது கலைக்கும் கலைஞர்களுக்கும் மிகவும் கவலைக்குரிய செயலாகும். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை தடுக்கும் விதமாக கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்” என்று தனுஷ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *