அமலாக்கத்துறை (ED) மேற்கொள்ளும் விசாரணையின் ஒரு பகுதியாக தொழிலதிபர் அனில் அம்பானியின் மேலும் ரூ.1,120 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. இதற்கு முன்பு ரூ.9,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்ட நிலையில், இப்போது கூடுதலாக சொத்துகள் முடக்கப்பட்டதால், இதுவரை முடக்கப்பட்ட மொத்த சொத்து மதிப்பு ரூ.10,117 கோடியாக உயர்ந்துள்ளது. நிரந்தர வைப்பு, வங்கி கணக்குகள், நிதி சொத்துகள் உட்பட பல்வேறு சொத்துகள் இதில் அடங்கும்.இந்த நடவடிக்கையின் போது ரிலையன்ஸ் வேல்யூஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னையில் உள்ள 231 குடியிருப்புகள், 7 பிளாட்டுகள், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்தின் 7 சொத்துகள் உள்ளிட்ட மொத்தம் 18 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ், யெஸ் வங்கி மோசடி தொடர்பான வழக்குகளில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ED தெரிவித்துள்ளது. இந்த விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், அடுத்த கட்டத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

