மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாட்டின் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்நாட்டின் கோயில் நகரமான மதுரையில் அமைந்துள்ள மதுரை விமான நிலையம், மாநிலத்தின் பழமையான விமான நிலையங்களில் ஒன்றாகும். இது தென் தமிழ்நாட்டிற்கான ஒரு முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது. மேலும், சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இதன் மூலம் இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பிராந்திய இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறிப்பாக தெற்கு தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும். காலத்தால் அழியாத கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்திற்காக கொண்டாடப்படும் மதுரை நகரம், அதன் உலகளாவிய இணைப்பை வலுப்படுத்த உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

