அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 10 தொகுதிகளில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் ஏற்கனவே வென்ற 10 இடங்களையும் சேர்த்து பாஜக 46 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அருணாச்சல் மக்கள் கட்சி 2 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றனர். காங்கிரஸ் கட்சி ஓரிடத்தைப் பிடித்தது. அருணாச்சலப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், பா.ஜ.க 46 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துள்ளது.
சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 31 இடங்களில் அமோக வெற்றிபெற்று, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வெற்றிவாகை சூடியது. சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரு தொகுதியைக் கைப்பற்றியது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்துள்ளது. மேலும், ஆட்சியை தக்க வைத்துள்ளது.

