ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணமடைந்ததை அடுத்து இடைத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி வெளியானது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி 7ம் தேதி வரை நடைபெற்றது. மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளராக தென்னரசு, தேமுக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாநகர் பகுதியில் பிரசாரம் களை கட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஈரோட்டிற்கு பிரசாரத்திற்கு வந்த அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த வெளி மாவட்ட முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களது சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் மாலையே சென்றனர். இதனால், ஈரோடு மாநகர் இயல்பு நிலைக்கு திரும்பியது. போக்குவரத்து நெரிசல் இன்றி, அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் பணியில் 1206 அலுவலர்கள் பணியில் உள்ளனர். இந்த மையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்க டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 74.69% வாக்குகள் பதிவு ஆகியுள்ளது. இதுவரை 82,021ஆண்கள், 87,907 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.