பள்ளி பாடப்புத்தங்களில் இந்தியா பெயரை பாரத் என மாற்ற பரிந்துரை; NCERT குழு முடிவு என தகவல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் பணியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்பட உலகின் 20 நாடுகளின் தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்ற ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஜி 20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் வழக்கமாக இடம்பெறும் இந்தியப் குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருந்தது. இது பெரும் பேசும் பொருளாக மாறியது.
அதேபோல் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயர் இடம்பெற்றது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. வழக்கமாக இந்தியா என இடம்பெறும் நிலையில் இந்த ஆண்டு பாரத் என இடம்பெற்றது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையின் உயர்மட்ட கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐ.நா பொதுச் சபையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது உரையை தொடங்கும் போது இந்தியாவுக்கு பதிலாக பாரதத்தின் வணக்கம் என குறிப்பிட்டார்.தனது தொடக்க உரையின்போது பாரதம் என குறிப்பிட்டது போலவே முடிவுரையிலும் பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தினார். ”நாங்கள் பாரம்பரியத்தை மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் சமமாக பின்பற்றி வருகிறோம். இந்த கலவைதான் பாரதத்தை வரையறுக்கிறது” என பேசி தனது உரையை முடித்துக்கொண்டார்.
ஜி20 மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் பாரதம் என்ற பெயரே இருந்தது. இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றப் போவதாக தகவல்கள் கசிந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *