அமெரிக்க அரசின் முடக்கத்தால் குழப்பமும் பதற்றமும் அதிகரித்துள்ளதால் மக்கள் தங்கத்தை வாங்குவது அதிகரித்துள்ளது. அமெரிக்க அரசு முடங்குவது போன்ற அரசியல் பதற்றம் அதிகரிக்கும்போது, முதலீட்டாளர்கள் பெரும்பாலும் ரிஸ்க் இருக்கும் முதலீடுகள் (அதாவது பங்குச்சந்தை, சில கரன்சி) உள்ளிட்டவற்றில் இருந்து பணத்தை எடுத்து, தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துக்களில் முதலீடு செய்கின்றனர். அதேபோல சிக்கலான காலங்களில், பணவீக்கம் அல்லது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவது போன்ற சூழல்களில் அதில் இருந்து தங்கள் சொத்துகளை பாதுகாக்க மக்கள் பெரும்பாலும் தங்கத்தில் தான் முதலீடு செய்வார்கள். இவை எல்லாம் சேர்த்தே தங்கம் விலையை கடந்த சில நாட்களாக புதிய உச்சத்திற்கு சென்றுள்ளது.
அமெரிக்க அரசுக்கு நிதி தேவைப்படுவதால், அந்த நிதியை பெற அங்குள்ள நாடாளுமன்றம் தொடர்ச்சியாக சட்டத்தை நிறைவேற்றும். இதை செலவினங்கள் மசோதா, அதாவது ஆங்கிலத்தில் “appropriations” அல்லது “spending bills” என்று அழைப்பார்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த மசோதாவை நிறைவேற்றத் தவறினால், அமெரிக்க அரசின் பல நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கும். அரசு முடங்கும் போது, அத்தியாவசியமற்ற ஊழியர்களுக்கு ஊதியமற்ற விடுப்பில் அனுப்பப்படுவார்கள். அதாவது அவர்கள் வேலை செய்தாலும் ஊதியம் கிடைக்காது. மேலும், அரசுத் திட்டங்கள் நிறுத்தப்படும். இதனால் மக்களிடையே நிச்சயமற்ற நிலை அதிகரிக்கும். இது அரசியல் மற்றும் நிதி நெருக்கடியின் ஒரு முக்கிய அறிகுறியாகும். பொதுவாகவே ஷேர்மார்கெட்கள் இத்தகைய நிச்சயமற்ற சூழ்நிலைகளை விரும்பாது.
அமெரிக்காவில் அரசுச் செலவினங்கள் தொடர்பான மசோதாவில் ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உடன்பாடு எட்டப்படாததால், அமெரிக்காவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் செனட் சபையில் இரு தரப்பிற்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் குழப்பம் தொடர்கிறது. இதனால் அமெரிக்கா ஷட் டவ்ன், அதாவது முடக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் சர்வதேச அளவில் ஒரு குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.